ஆண்டிபட்டி பகுதியில் கர்ப்பிணி நிதியில் நர்ஸ் மோசடி தலைமறைவானவருக்கு வலை

தேனி, அக். 2: தேனி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நிதிஉதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு ரூ.12 ஆயிரம் பணமாகவும், ரூ.6 ஆயிரத்துக்கு பெட்டகம் மற்றும் பொருட்கள் என ரூ.18 ஆயிரத்துக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை கிராம சுகாதார செவிலியர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இவர்களில் சிலர் கர்ப்பிணிகளை பதிவு செய்யும் போதே லஞ்சம் வாங்கி விடுகின்றனர். லஞ்சம் கொடுக்காத கர்ப்பிணிகள் பெயரை பதிவு செய்வதில்லை. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கிராம சுகாதார செவிலியர் ஒருவர், கர்ப்பம் தரிக்காத ஒரு பெண்ணை பதிவு செய்து, அந்த பெண்ணுக்கு வழங்க வேண்டிய நிதியை தனது வங்கி கணக்கிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார். மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நடத்திய விசாரணையில் இந்த உண்மை அம்பலமானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோல் மேலும் சிலர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது குறித்து தேனி எஸ்பியிடம் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ேபாலீசார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர் மீது போலீசார் வழக்குப்பதிந்த நிலையில், திடீரென அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த முறைகேடு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தை பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மருத்துவர்கள் என பலர் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை. இந்த முறைகேட்டில் பலருக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த குழு அமைக்கவே பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினர். முடிவில் முதல்வர் தனிப்பிரிவு உத்தரவு வந்த பின்னர் குழு அமைத்து விசாரித்து வருகிறோம். மேலும் பலர் சிக்குவார்கள் என்பதால் இப்போதைக்கு யாருடைய பெயரையும் வெளியிட விரும்பவில்லை’’ என்றனர். கர்ப்பிணி உதவித்தொகையில் முறைகேடு செய்த செவிலியர் தலைமறைவான சம்பவம் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>