சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கொத்தனார் உடலை எலிகள் கடித்து குதறியது அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

திருக்கோவிலூர், அக். 2: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கொத்தனார் உடலை எலிகள் கடித்து குதறியது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் ஆவியூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் ஆறுமுகம்(40), மண்ணு மகன் முருகன்(52) ஆகியோர் இந்த வீட்டின் முன்புற பகுதியில் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாரத்தில் உள்ள கயிற்றை கட்ட முற்படும் போது உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் முருகன் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஆறுமுகத்தின் உடல், மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்வதற்காக ஆறுமுகத்தின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் சவக்கிடங்கில் இருந்து எடுக்கும்போது ஆறுமுகத்தின் மூக்கு மற்றும் கால் கட்டை விரல் பகுதியை எலிகள் கடித்து குதறி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள் மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்குள் ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு எலி கடித்த சம்பவம் தெரியவரவே மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததின் பேரில் ஆறுமுகம் உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories:

>