கடலூர் தாழங்குடாவில் மீண்டும் பதற்றம் போலீஸ் விரட்டியதால் தப்பி ஓடிய மீனவர் சாவு போலீசார்- மக்கள் வாக்குவாதம்

கடலூர், அக். 2: கடலூர் தாழங்குடா பகுதியில் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்த மீனவர் இறந்தார். இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.  கடலூர் தாழங்குடாவில் கடந்த ஆகஸ்ட் 2ம் ேததி இருதரப்பினர் இடையே தேர்தல் முன் விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்புள்ள படகுகள், வலைகள் எரிந்து சேதமடைந்தன. மீனவர் ஒருவர் இறந்தார். மேலும் அன்றிலிருந்து இன்று வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் 53 பேர் மீது வழக்கு பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர். இது சம்பந்தாக நாளை(இன்று) கடலூரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தகவல் தெரிவிக்க நேற்று மாலை போலீசார் தாழங்குடா கிராமத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த குப்புராஜ், சுப்பிரமணி, குமார் ஆகியோர் உப்பனாறு அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.   

 அவர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடியுள்ளனர். உடனே போலீசாரும் அவர்களை துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குப்புராஜ், சுப்பிரமணி, குமார் ஆகிய மூன்று பேரும் உப்பனாற்றில் குத்தித்துள்ளனர். இதில் குமார், சுப்பிரமணி ஆகிய இருவரும் நீந்தி கரையேறி ஊர் திரும்பினர். ஆனால் குப்புராஜ் மட்டும் திரும்பவில்லை. இதையடுத்து, கிராம மக்களும், போலீசாரும் ஆற்றில் தேடி உள்ளனர். அப்போது, குப்புராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு திரண்ட தாழ்ங்குடா கிராம மக்கள் போலீசார் துரத்தியதால் தான் குப்புராஜ் உயிழந்ததாக கூறி உடலை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.  

  சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் ஏடிஎஸ்பி பாண்டியன், டிஎஸ்பி சாந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, குப்புராஜ் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.      இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இச்சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>