×

விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

மன்னார்குடி, அக்.2: மன்னார்குடி வேளாண் ஒன்றியத்தில் விடுபட்டுள்ள கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வேளாண் ஒன்றியத்திற்குட்பட்ட 73 வருவாய் கிராமங்களை சேர்ந்த சுமார் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர்களில் சாகுபடி செய்யப் பட்டிருந்த சம்பா பயிர்களை 2019-20ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 460 வீதம் தொகை செலுத்தி பயிர்களை இன்சூரன்ஸ் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டூர் ஒன்றியத்தில் இன்சூரன்ஸ் தொகைக்கான பட்டியல் வெளியாகியது. இதில்சவளக்காரன், பாமணி, வேட்டைத்திடல், திருராமேஸ்வரம் உள்ளிட்ட 24 வருவாய் கிராமங்கள் முற்றிலும் விடப்பட்டிருந்தன. இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விடுபட்ட 24 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், ஒன்றிய செயலாளர் பாப்பையன் ஆகியோர்பேசினர். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், பயிர் இன்சூரன்ஸ தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு கிடைப்பது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : union protests ,
× RELATED போக்குவரத்து கழகத்தின் பஞ்சப்படி...