×

ஆவுடையார்கோவில் அருகே பயணிகளை அச்சுறுத்தும் சேதமடைந்த நிழற்குடை

அறந்தாங்கி, அக்.2: ஆவுடையார்கோவில் அருகே சேதமடைந்த பயணியர் நிழற்குடைக்கு பதிலாக புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவுடையார்கோவிலில் இருந்து கோட்டைப்பட்டினம் செல்லும் சாலையில் பூவலூர் விலக்கு ரோடு உள்ளது. ஆவுடையார்கோவில் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இருந்து பேருந்துகளில் வரும் பயணிகள் இங்கிருந்து பூவலூர் கிராமத்திற்கு 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இவ்வாறு ஆவுடையார்கோவில்-கோட்டைப்பட்டினம் மெயின்ரோட்டில் பேருந்துகளில் இருந்து இறங்கி செல்லும் பயணிகளின் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் இரும்பால் ஆன பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது அந்த நிழற்குடையின் மேல்பகுதி சேதமடைந்தும், இரும்பு கம்பி துருபிடித்தும், கீழே விழும் நிலையில் உள்ளது. காற்று பலமாக வீசினால் தடதடவென எழும்பும் சத்தம் பயணிகளை அச்சுறுத்துகிறது. மேலும் இந்த நிழற்குடை அதிக உயரத்தில் உள்ளதால், மழை பெய்தால்கூட நிழற்குடைக்குள் நிற்பவர் நனையும் நிலை உள்ளதால் நனைந்து கொண்டே வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சுரேஷ் கூறியது: பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடை சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்துவிட்டது.

தற்போது இந்த நிழற்குடை கீழே விழும் நிலையில் உள்ளதால், பயணிகள் இந்த நிழற்குடைக்குள் செல்வதில்லை. இதனால் பயணிகள் மழையில் நனைந்தவாறே பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எனவே பூவலூர் செல்லும் பயணிகளின் நலனுக்காக ஆவுடையார்கோவில்-கோட்டைப்பட்டினம் சாலையில் பூவலுhர் விலக்கு சாலை அருகே புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : passengers ,Audyarkov ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்