×

தாட்கோ திட்டங்களில் பயன் பெற ஆதி திராவிடர், பழங்குடியின சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம்

கரூர், அக். 2: கரூர் கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல் திட்டம், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற 18 வயது முதல் 65 வயது வரையுளள ஆதி திராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான வரம்பு ரூ. 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதே போல், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம், அதில் மருத்துவ மையம், மருந்தியல், கண்கண்ணாடியகம், முடநீக்கியல் மையம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 45 வயதும், வருமான வரம்பு ரூ. 3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆதி திராவிடர், பழங்குடியின மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன்களுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

இவை தவிர, மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி, தாட்கோ மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோர்களுக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க நிதியுதவி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி மற்றும் பட்டயக்கணக்கர், செலவுகணக்கர், நிறுவன செயலர் கல்வி பயில்வோர்களுக்கான நிதியுதவி ஆகிய திட்டங்களில் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ, நகலினையோ கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விபரங்கள், புகைப்படம், சாதிச்சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பத்தாரரின் கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை ஆகியவற்றினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

Tags : Adi Dravidar ,communities ,
× RELATED பூதப்பாண்டி அருகே பரபரப்பு பள்ளி குடிநீரில் கழிவுகள் கலக்கப்பட்டதா?