×

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் திருப்பூர் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும்

திருப்பூர், அக். 2:  திருப்பூர், அரசு மருத்துவமனையின் அஜாக்கிரதையால் 4 நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை இடம் மாற்ற வேண்டும் என  கோவை எம்.பி. நடராஜன் திருப்பூரில் நேற்று தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோவை எம்.பி நடராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திருப்பூர் மாவட்டம் முழுவதும் தினசரி கொரோனா பரிசோதனை 6000ஆக  வரை உயர்த்த வேண்டும். 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை தெரியப்படுத்த வேண்டும். கொரோனா வார்டில் குடிநீர் கழிப்பிடம் மற்றும் குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் ஆக்சிஜன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், கோவை எம்.பி. நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வரக்கூடிய திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் அஜாக்கிரதை காரணமாக மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்திவதில் ஏற்பட்ட இடையூறால் 4 உயிரிழந்தனர். இது மிகவும் அவமான நிகழ்வாகும். இது மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோரின் கவனக்குறைவு காரணமாக நடந்தது.

செயல்படாத கலெக்டர் திருப்பூருக்கு தேவையா? மாநில அரசு தனக்கு வேண்டியவர் என பார்க்காமல் செயல்படாத கலெக்டரை இடம் மாற்ற வேண்டும். திருப்பூர் மாவட்டத்திற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் மருத்துவக்கல்லூரி டீன்  வள்ளி இருவரும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேனேஜர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெண்கள் மீது வழக்குப்பதிந்துள்ளனர். இத்தகைய, வழக்கில் போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு செயல்படுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எனவே, பல்லடம் போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக யாரும் ஓட்டு போடவில்லை. இது ஜெயலலிதாவிற்கு போடப்பட்ட ஓட்டு. ஆனால், தமிழகத்தில் முதல்வர் நாற்காலிக்காக இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை தவிர்த்து நாட்டின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : death ,government hospital ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...