×

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திருப்பூர் கடைகளில் திடீர் ஆய்வு

திருப்பூர், அக்.2:  திருப்பூர் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சில்லரையாக விற்கும் இனிப்புகளில் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் திருப்பூர் அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், குமார் நகர், பி.என்.ரோடு ஆகிய பகுதிகளில் 7 இனிப்பு கடைகள், 3 பேக்கரிகள், 2 உணவகங்கள் மற்றும் ஒரு மளிகை கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான 4 பேரிச்சம் பழ பாக்கெட்டுகள், 22 அரை லிட்டர் குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து, கடை உரிமையாளர்களிடம், இனிமேல் சில்லரையாக விற்பனை செய்யப்படும் இனிப்புகளில் காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தினர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது: பேக்கிங் செய்யப்படாமல் சில்லரையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் காலாவதி தேதி விவரத்தை தெரிவிக்க வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனைத்து மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்களுக்கும் கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவு அனுப்பி உள்ளது. இந்த உத்தரவு அக்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய உத்தரவுப்படி இனிப்பு வகைகள் எத்தனை நாட்களுக்குள் உட்கொள்ள தகுந்தது என்பதை வாடிக்கையாளர்களுக்கு, கடைக்காரர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், மிகக் குறுகிய காலத்தில் கெட்டுபோகக்கூடிய இனிப்புகளை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். குறுகிய காலத்தில் கெட்டுவிடும் ரசகுல்லா, ரசமலாய் போன்ற பால் பொருட்கள், பெங்காலி இனிப்புகளை இரண்டு நாட்களில் பயன்படுத்த வேண்டும். நீண்ட கால அளவு கொண்ட நெய் மற்றும் உலர்ந்த பழங்கள் கலந்த இனிப்புகளை 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதுதவிர, எண்ணெய், நெய், வனஸ்பதி என எதை கொண்டு இனிப்புகள் தயாரிக்கப்பட்டது என்பதையும் கடைக்காரர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Food safety officers ,shops ,Tirupur ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி