×

வனவிலங்கு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிவாரணம்

ஊட்டி, அக்.2: முதுமலையில் காட்டு யானை மற்றும் புலி தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி பகுதியில் யானை மற்றும் புலி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி மசினகுடியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசால் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. முதுமலை மசினகுடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காட்டு யானை தாக்கி உயிரிழந்த செம்மநத்தம் கிராமத்தை சேர்ந்த பெள்ளியம்மாள் குடும்பத்திற்கு ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை அவரின் வாரிசுதாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் யானை தாக்கி உயிரிழந்த உண்டிமாயார் கிராமத்தை சேர்ந்த மாதேவி என்பவரின் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மீதமுள்ள தொகை அவரின் கணவர் சின்ன பண்டனிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்காரா அருகே கல்லாலா பகுதியில் புலி தாக்கியதில் இறந்த குரும்பர்பாடியை சேர்ந்த கவுரியின் குடும்பத்திற்கு மீதமுள்ள நிவாரண தொகை அவரின் வாரிசுதாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. 3 பேரின் குடுப்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.12 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, முதுமலை புலிகள் காப்பக மசினகுடி துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், ஊட்டி துணை ஆட்சியர் மோனிகா ரானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : families ,wildlife victims ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...