×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு குமரி முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பு

நாகர்கோவில், அக்.1 :  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குமரி மாவட்டத்தில் நேற்று  முன் தினம் இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இரவு நேர ரோந்து பணிகள் ஷிப்ட் முறையில் மாற்றி அமைக்கப்பட்டது. இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஒரு பிரிவும், அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு பிரிவும் என மாற்றப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

எஸ்.பி. பத்ரி நாராயணன் மேற்பார்வையில், ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி, டி.எஸ்.பி.க்கள் வேணுகோபால், பீட்டர் பால், கல்யாணகுமார், பாஸ்கரன், ராமச்சந்திரன், கணேசன், பால்ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்றும் 2 வது நாளாக பாதுகாப்பு அதிரிக்கப்பட்டது. நேற்று காலை தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். நாகர்கோவிலில் இடலாக்குடி, இளங்கடை, வெள்ளாடிச்சிவிளை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்தனர். தக்கலை, குளச்சல், தேங்காப்பட்டணம், திருவிதாங்கோடு, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, அருமனை உள்பட மாவட்டம் முழுவதும்  முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்தனர். கடலோர காவல் படையினரும் ரோந்து பணியில் உள்ளனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள லாட்ஜ்களிலும் கண்காணித்தனர்.  முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு  இரவு முதல் ஷிப்ட் முறையில் ரோந்து பணி தொடங்கியது. மாவட்டத்துக்குள் வந்த அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனர்.

Tags : Babri Masjid ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...