பைக்கில் சென்ற 2 தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி செயின்பறிப்பு

புதுச்சேரி, அக். 1:  புதுச்சேரி, லாஸ்பேட்டை, அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (42). ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநில தேர்தல் துறை அலுவலகத்தில் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர் 29ம்தேதி இரவு தனது மனைவி செண்பகவள்ளியுடன் (38) அரியாங்குப்பத்தில் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் லாஸ்பேட்டை, ராஜாஜி நகர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் அருகே வந்தபோது பின்தொடர்ந்து ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் கத்தி முனையில் தம்பதியை மிரட்டிய வழிப்பறி கும்பல் செண்பகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அதிர்ச்சியடைந்த தம்பதி உடனே லாஸ்பேட்ைட காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். வடக்கு எஸ்பி சுபம்கோஷ் உத்தரவுக்கிணங்க இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், எஸ்ஐ கீர்த்தி தலைமையிலான ேபாலீசார், உடனடியாக ராஜ்குமாரிடம் புகாரை பெற்று வழக்குபதிவு செய்ததோடு செயின் பறிப்பு ஆசாமிகளை பிடிப்பதற்காக தங்களது காவல் சரக பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர்.

 இந்த நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மனைவி நந்தினியுடன் (28) வெளியே சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிரந்த பிளம்பரான, லாஸ்பேட்டை டோபிகானா மடுவுபேட், 4வது குறுக்குத் தெருவில் வசிக்கும் சதீஷ் (30) என்பவரை அரவிந்தர் வீதியில் திடீரென பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்தனர். அவர்களையும் கத்தி முனையில் மிரட்டிய அதேகும்பல் நந்தினி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், கைப்பை, 2 செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பி ஓடிவிட்டது. நகை, செல்போன், கைப்பையை பறிகொடுத்த தம்பதி கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டனர். இதுபற்றி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், நகையை பறிகொடுத்த தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக சதீஷிடம் புகாரை பெற்ற காவல்துறை உடனே வழக்குபதிவு செய்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் போலீசுக்கு துப்புகள்  கிடைத்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. சந்தேகத்தின்பேரில் 2 பேரை தனிப்படை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதே கும்பல்தான் வானூர் தாலுகா பட்டானூரைச் சேர்ந்த மாமியார், மருமகளிடம் 14 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஆரோவில் போலீசாருடன் இணைந்து தேடுதல் பணியை லாஸ்பேட்டை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.இச்சம்பவம் லாஸ்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>