×

ஆனைமலை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று துவக்கம் அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி, அக். 1:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பும், டிசம்பர் மாதத்தில் குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பும் நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  இதில், கடந்த சில ஆண்டுகளாக, வனப்பகுதியில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் இந்த ஆண்டும் புலிகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி (டாப்சிலிப்) ஆகிய 4 வனச்சரகங்களிலும் ஆங்காங்கே கேமராக்களை பொருத்தி புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று (1ம் தேதி) துவங்க உள்ளது.

இதற்காக ஒவ்வொரு வனச்சரகங்களிலும் இரண்டு சதுர கி.மீ. தூரத்துக்கு 2 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதேபோல் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட 4 வனச்சரகங்களிலும் மொத்தம் 245 கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இக்கணக்கெடுப்பு பணியில் 25 நாட்களுக்கு வனப்பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் களப்பணி மேற்கொள்ள உள்ளனர். மேலும் வனத்திற்குள் அமைக்கப்படும் கேமராக்களில் பதிவாகும் புலிகள் மட்டுமின்றி, அந்த பகுதியில் என்னென்ன விலங்குகள் நடமாடுகிறது? என கண்காணித்து பதிவு செய்யப்பட உள்ளது.  இந்த கணக்கெடுப்பு பணியுடன், புலிகளின் கால்தடம், எச்சம், மரங்களில் நக கீரல்கள் போன்ற மறைமுக கணக்கெடுப்பு பணி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. முன்னதாக, புலிகள் கணக்கெடுப்பு குறித்து பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி, அட்டக்கட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiger ,survey work ,forest area ,Anaimalai ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...