×

காந்தி ஜெயந்தியையொடடி ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம்

பொள்ளாச்சி, அக். 1:  பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சிகளில், நாளை காந்தி ஜெயந்தியையொட்டி அரசு வழிகாட்டுதலின்படி சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட முக்கிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், கிராம பகுதிகளுக்கு அரசு அறிவிக்கும் புதிய திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்க சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மே 1ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், ஊராட்சிகளில் அரசு வழிகாட்டுதலின்படி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கான அறிவுரைகள், அந்தந்த ஒன்றியங்களுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி தாலுகாவில் வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சி, தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சி, ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சி என மொத்தமுள்ள 84 ஊராட்சிகளிலும் நாளை காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்கள்  முன்னிலையில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

 இந்த கிராமசபை கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களை பராமரித்தல், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், சீரான குடிநீர் வினியோகம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த  தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளது. ெகாரோனா ஊரடங்கு தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ஊராட்சிகளிலும் கிருமி நாசினி தெளித்து, கிராமசபையில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்குதல், உடல் வெப்ப நிலை பரிசோதனை, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : village council meeting ,Gandhi Jayanti ,
× RELATED அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில்...