×

கனமழையால் நிரம்பி வழியும் பைரோஜி ஏரி

ஆட்டையாம்பட்டி, அக்.1:சேலம் மாநகரில் பெய்து  வரும் தொடர் மழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பைரோஜி ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. ஆட்டையாம்பட்டி  அடுத்துள்ள பைரோஜி கிராமத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 60 ஏக்கர்  பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. சேலம் மாநகரில் மழை பெய்யும் போது, திருமணி முத்தாற்றில் வரும்  தண்ணீர் மற்றும் சாக்கடை கழிவுர்நீர், ஏரியில் சேகரமாவதால், ஆண்டு முழுவதுமாக ஏரியில் நீர்மட்டம் குறைவதில்லை. இந்த  ஏரியின் மூலம் பைரோஜி, புதுப்பாளையம், சென்னகிரி, பிச்சம்பாளையம்  சுற்றுவட்டார பகுதியில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி  பெறுகிறது. கடந்தாண்டு ஏரியை தூர்வார பூமி பூஜை போடப்பட்டது.

சேலம் மாநகர  பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீரால், ஏரியில் தண்ணீர்  வற்றாததாலும், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டிய சூழல்  ஏற்பட்டதாலும், ஏரியை தூர்வார முடியவில்லை. இந்நிலையில், கடந்த இருநாட்களாக சேலத்தில் இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழையால்,  திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டார  பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுடன், பைரோஜி ஏரியும் நிரம்பி உள்ளது. மறுகரையில் தண்ணீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

Tags : Lake Piroji ,
× RELATED தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி