×

திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க மறுப்பு ஒன்றியக்கூட்டத்தில் திமுக வெளிநடப்பு சேர்மன், பிடிஓ மீது பரபரப்பு புகார்

அயோத்தியாபட்டணம், அக்.1:  அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் பகுதியில் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஆணையாளரை கண்டித்து நேற்று உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம்  ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம்  துவங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது.  அப்போது திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் மேற்கொள்ளும்  திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், வட்டார வளர்ச்சி அலுவலர்  குமரேசன், அன்புராஜ் ஆகியோர், ஆளும்கட்சியினர் செயல்படுத்தும்  திட்டங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்கின்றனர்.  இதனால் தங்கள் பகுதிகளில் திட்டப்பணிகளை செயல்படுத்த முடியவில்லை என்றனர். ஆனால், அவர்களது கேள்விக்கு ஒன்றிய ஆணையாளர் குமரேசன் பதில்  அளிக்கவில்லை.

இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட  தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கையொப்பம் இடாமல் கூட்டத்தை  புறக்கணித்து வெளியேறினர். இதுகுறித்து திமுக உறுப்பினர்கள் கூறுகையில்,  ‘ஆளும்கட்சியினருக்கு சாதகமாக ஒன்றிய ஆணையாளர் செயல்பட்டு  வருகிறார். கூட்டாத்துப்பட்டி பாலப்பட்டி பகுதியில், ஒன்றிய  ஆணையாளர் மற்றும் ஒன்றிய சேர்மன் இணைந்து, குவாரி அமைத்து வருகின்றனர்.  ஏழை, மக்களுக்கு வழங்க வேண்டிய சிமெண்டை,  குவாரிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து  புகார்கள் வந்துள்ளது. எனவே, பிடிஓ மற்றும் ஒன்றிய சேர்மன் மீது மாவட்ட  நிர்வாகம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : DMK ,union meeting ,
× RELATED கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம்