×

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி, அக். 1: வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் ராகவன் என்பருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பூச்சட்டி, தரைசக்கரம், பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நேற்றும் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் எலக்ட்க்ரிக் ஸ்டோன் வெடிகள் தயாரித்து ஒரு அறையில் உலர வைத்திருந்தனர். மதியம் 12 மணி போல் திடீரென ஸ்டோன் வெடிகளில் இருந்து புகை கிளம்பி சட, சடவென வெடிக்க துவங்கியது. உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறினர். பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் தீப்பிடித்து எரிந்த வெடிகளை தண்ணீரை ஊற்றி வேகமாக அணைக்க துவங்கினர். இதனால் தீ மற்ற அறைகளுக்கு பறவவில்லை.

இதுகுறித்த தகவலறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீப்பிடித்த அருகில் இருந்த மற்ற அறைகளையும் தீ பரவவிடாமல் தடுத்தனர். இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்க பட்டது. வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகினார். தொடர்ந்து நேற்றும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Explosion ,firecracker factory ,Vembakkottai ,
× RELATED 2012ம் ஆண்டு 39 உயிர்களை பலி கொண்ட பட்டாசு...