சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு கள்ளிக்குடி தாலுகா அலுவலகம் முற்றுகை

திருமங்கலம், அக். 1: மத்திய அரசின் தபால்துறை, ரயில்வே உள்ளிட்ட பணிகளில் முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் இ.டபிள்.யூ.எஸ் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், பேரையூர் தாலுகாக்களில் இந்த பிரிவினருக்கு இ.டபிள்யூ.எஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கள்ளிக்குடி தாலுகாவில் மட்டும் இந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் தபால்துறையில் நேர்காணலுக்கு தயாராகியுள்ள கள்ளிக்குடி தாலுகாவை சேர்ந்த போத்தநதி, புதுப்பட்டி, உன்னிப்பட்டி, சித்தூர் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 100 போ் இ.டபிள்.யூ சான்றிதழ் கேட்டு கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்த சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தனர்.

நேற்று தான் தபால்துறை நேர்காணலுக்கான விண்ணப்ப படிவங்களை அனுப்ப கடைசி நாள். ஆனால் நேற்று வரையில் இந்த சான்றிதழ் கிடைக்காததால் தபால்துறையில் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்த 4 கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோருடன் கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாணவ, மாணவியர்கள் கூறுகையில், ‘முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளித்து கடந்தாண்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டினை பெற தேவையான சான்றிதழ்களை உரியோருக்கு வழங்க தாசில்தார்களுக்கு வருவாய்த்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் கள்ளிக்குடி தாலுகாவில் மட்டும் வழங்க மறுக்கின்றனர். இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: