×

ஒட்டன்சத்திரம் அருகே 72 ஆண்டாக இருளில் தவித்த மலைக்கிராமத்திற்கு மின் வசதி திமுக எம்எல்ஏவின் முயற்சியால் கிடைத்தது

ஒட்டன்சத்திரம், அக். 1: ஒட்டன்சத்திரம் அருகே சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளாக இருளில் தத்தளித்து வந்த மலைக்கிராம மக்களுக்கு திமுக எம்எல்ஏ முயற்சியால் மின்சாரம் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு ஊராட்சியில் உள்ளது சிறுவாட்டுக்காடு மலைக்கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பிடம் ஆகியவை இல்லை. குறிப்பாக, மின்சாரம் இல்லாததால்  இங்குள்ள குழந்தைகள் வெளியூர் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக எம்எல்ஏ அர.சக்கரபாணி முயற்சியால், எம்பி கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இங்கு சோலார் மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் ஓரளவிற்கு மின் வசதியை பெற்றனர். அடிக்கடி மழை பெய்ததால் சோலாரை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சிறுவாட்டுக்காடு மலைக்கிராமத்தில் மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, எம்எல்ஏ அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ஏற்று, மின் இணைப்பு வழங்க மாநில மின்சார சமச்சீர் நிதியில் இருந்து ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டது. பெத்தேல்புரத்தில் இருந்து சிறுவாட்டுக்காடு வரை தரைவழி மூலம் மின் வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இதற்கான பணி தொடங்கியது.

பெத்தேல்புரத்தில் இருந்து சிறுவாட்டுக்காடு வரை 15 ஹெச்.டி போஸ்ட்கள், 24 எல்டி போஸ்ட்கள் அமைக்கப்பட்டு தற்போது பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் கிராமமக்களுக்கு நிரந்தரமாக மின்சார வசதி கிடைக்க உள்ளது.இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் கூறுகையில், ‘‘சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் மின்சார வசதி இல்லை. கிராமமே இருளில் மூழ்கி கிடப்பதால் எந்த நேரத்தில் வன விலங்குகள் வந்து தாக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்து வந்தோம். அர.சக்கரபாணி எம்எல்ஏவின் துரித நடவடிக்கையால் எங்களுக்கு சாலை மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது. மேலும் எம்பி கனிமொழி நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இருளில் கிடந்த எங்கள் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags : Ottanchattiram ,DMK MLA ,hill village ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா