×

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு மேலும் ஒரு சென்னை வாலிபர் கைது

காஞ்சிபுரம்: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயி திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் நிதியுதவி கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் போலியாக பதிவு செய்தது அம்பலமானது.

கிசான் சம்மான் முறைகேடு விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரத்தில் 2,609 போலி நபர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம்பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்தது. இதைெயாட்டி, மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், கிசான் சம்மான் திட்டத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்து உதவித் தொகை பெறுவதற்கு, இடைத்தரகராக செயல்பட்ட சென்னையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

மாமல்லபுரம்: சென்னை சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 13 பேர் குழுவாக, நேற்று முன்தினம் கிழக்கு கற்கரை சாலையில் உள்ள நித்ய கல்யாணபெருமாள் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்த பிறகு அவர்கள், மாமல்லபுரம் அருகே உள்ள புலிக்குகை பகுதிக்கு சென்று, கடலில் குளித்தனர். இதில், மாம்பலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சந்தோஷ் (18), நவீன்குமார் (18) ஆகியோரை தீடீரென எழுந்த ராட்சத அலை இழுத்து சென்றது. அப்போது, அவர்களுடன் குளித்து கொண்டிருந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மீனவர்கள் ஓடி வந்து இருவரையும் தேடி, நவீன்குமாரை மட்டும் மீட்டனர். சந்தோஷ் மாயமானார்.

புகாரின்படி மாமல்லபுரம் போலீசார், கடலில் மாயமான கல்லூரி மாணவன் சந்தோஷை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை, மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் பகுதியில், சந்தோஷ் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: கடலூர் மாவட்டம், விருதாச்சலம், ஆலடி தெருவை சேர்ந்தவர் முருகானந்தன். இவரது மகன் முகேஷ்வர் (21). கடலூரில் உள்ள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் பிரபல கண்ணாடி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, பயிற்சி பெறுவதற்காக முகேஷ்வர் உள்பட 30 பேர் ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளனர். அவர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முந்தினம் தொழிற்சாலையில் உள்ள கன்வெயர் இயந்திரத்தை முகேஷ்வர், சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் அவரது கை சிக்கியது. இதில் முகேஷ்வர் கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள், உடனடியாக அவரை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முகேஷ்வர் இறந்தார்.புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருப்போரூர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்படி எஸ்ஐ ராஜா தலைமையில் போலீசார் திருப்போரூர் பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது, தண்டலம் ஏரிக்கரையில் பைக் சீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், திருப்போரூர் கச்சேரி சந்து தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி (21). கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை கிடைக்காததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். இயைதடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.

Tags : Chennai ,Kisan ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...