×

திடீர் மழையால் சேறும் சகதியுமான தெருக்களில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, சேறும் சகதியுமான தெருக்களில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிச்சிவாக்கம் ஊராட்சியில் பிச்சிவாக்கம், பிச்சிவாக்கம் காலனி, பட்டுமுடையார்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள தெருக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன. மேலும் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக் காலத்தில் மழைநீர் வெளியேற வசதி இல்லாமல், வீடுகளில் தண்ணீர் தேங்கிவிடுகிறது.

மேலும் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இந்த தெருக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், மேற்கண்ட ஊராட்சியில் உள்ள பெரும்பாலான தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியது. இதையொட்டி, அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெண்கள், தங்கள் அதிருப்தியை வெளிபடுத்த தெருக்களில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Seedling nut women ,streets ,
× RELATED தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள்