×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை சுமார் 3 மணியளவில், திடீரென கருமேகங்கள் சூழத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கி, 8 மணிக்குமேல் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேநேரத்தில் இந்த திடீர் மழையால் காஞ்சிபுரத்தில் ஜெம் நகர், ஓரிக்கை மிலிட்டரி சாலையில் உள்ள ஆசிரியர் நகர், ராஜன் நகர், திருவேங்கடம் நகர், காஞ்சிபுரம் மேட்டுத் தெரு, கீரை மண்டபம், செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ராகவேந்திரா நகர், ரேவதி நகர் உள்பட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனா். இதேபோன்று செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், மதுராந்தகம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Tags : Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை