×

மாமல்லபுரம் ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான 1054 ஏக்கர் சொத்துக்களை அளக்க வேண்டும்: செங்கல்பட்டு கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஆளவந்தான் அறக்கட்டளை கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான் அறக்கட்டளை கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 60 ஆயிரம் கோடி மதிப்புடைய 2000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துக்களை அபகரிக்க 20க்கும் மேற்பட்ட குழுக்கள் முயற்சி செய்கின்றன. சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கோயில் சொத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை, வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும்.

அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், இந்த 2 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, அது தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக வருவாய் துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இடைக்கால அறிக்கையில், சர்வே எண், எவ்வளவு சதுர அடி நிலம், கடந்த 10 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்கள், பட்டா, சிட்டா, ஏ ரிஜிஸ்டர், அடங்கல், நிலத்தின் வகைபாடு உள்பட அனைத்து விவரங்களும் இருக்கவேண்டும் என வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தான் கோயில் செயல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யவோ, வில்லங்க சான்றிதழ் வழங்கவோ கூடாது என்று தமிழக பத்திரப்பதிவு துறை ஐஜி, திருப்போரூர் சார் பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தேரஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுக்காக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தற்போதைய நிலை தொடர வேண்டும். இந்த 2 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய, பத்திரப்பதிவு துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்துய சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி, ஆளவந்தார் கோயிலுக்கு சொந்தமான 1054 ஏக்கர் நிலத்தை அளக்க தயாராக உள்ளோம். அறக்கட்டளை சார்பில் மாவட்ட கலெக்டருக்கு நிலங்களை அளப்பது குறித்து விண்ணப்பம் தர வேண்டும். அதன் அடிப்படையில் நிலத்தை அளக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலங்களை அளக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், செங்கல்பட்டு கலெக்டர் இந்த உத்தரவு நகல் கிடைத்த ஒரு வாரத்துக்குள், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags : Mamallapuram Alavanthan ,Chengalpattu Collector ,ICC ,
× RELATED வாக்களித்த மை அடையாளத்தை காட்டினால்...