×

செய்யூர் அருகே அதிமுகவினர் தலையீட்டால் ஏரி குடிமராமத்து பணி திடீர் நிறுத்தம்: அதிருப்தியில் விவசாயிகள்

செய்யூர்: செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடந்து வந்த, ஏரி புனரமைப்பு பணி, அதிமுகவினர் தலையீட்டால் திடீரென நின்றது. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகளை விவசாயிகள் சங்கத்தினர் மேற்கொள்ளலாம். அதற்கான நிதியை அந்தந்த விவசாய சங்கங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், பொதுப்பணித் துறை சார்பில் ஏரிகளை புனரமைப்பதற்காக பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்நிதியின் மூலம் விவசாய சங்கத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையொட்டி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் கிராமத்தின் பெரிய ஏரியை புனரமைக்க 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்பகுதி விவசாய சங்கத்தினர் பணிகளை துவங்கினர். ஆனால், பணி துவங்கிய ஓரிரு நாட்களில் அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சிலர், அங்கு சென்று புனரமைப்பு பணிகளை செய்த விவசாயிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு பின், அந்த பணியை மாவட்ட பொதுப்பணித் துறை நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது. தற்போது, 2 மாதங்களாகியும் நிறுத்தி வைக்கப்பட்ட, ஏரி தூர்வாரும் பணி இதுவரை தொடங்கு வதற்கு எவ்வித உத்தரவும் வெளியாகாமல் உள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கரும்பாக்கம் ஏரி சுமார் 200 ஏக்கர் நீர்ப்பிடிப்பு கொண்டது. இந்த ஏரியின் நீர் மூலம் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில், தமிழக அரசு அறிவிப்பின்படி, விவசாயி சங்கத்தினர் இந்த ஏரி புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அதிமுகவினர் சிலரது தலையீட்டின் காரணமாக, ஏரி புனரமைக்கும் பணி தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. இதுவரை, அந்த பணி துவங்குவதற்கான அறிவிப்பை பொதுப்பணித் துறையினர் வழங்கவில்லை.

விவசாயம் நடக்கும் இந்த மாதங்களில் இந்த ஏரியை தூர்வாரி, பழுதான மதகுகளை சீரமைப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், ஆளுங்கட்சியினரின் இதுபோன்ற தடைகளால், விவசாய பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடிமராமத்து பணிகளை விரைவில் துவங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Lake ,intervention ,AIADMK ,Seiyur ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்