×

செங்கல்பட்டு அருகே போலீஸ்காரர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்: 5 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பெரிய காலனியை சேர்ந்தவர் இன்பரசு (29). சென்னை புழல் சிறையில் போலீஸ்காரராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இன்பரசுக்கு நண்பர்கள் போன் செய்து, அங்குள்ள வயல்வெளிக்கு அழைத்தனர். அதன்படி அவர், அங்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடியபோது, பழையசீவரம் காட்டு பகுதியில் இன்பரசு சடலமாக கிடந்தார். புகாரின்படி பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பழையசீவரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள் என்பவரது மகளை இன்பரசுவின் அண்ணன் அன்பரசு காலித்தார். இது பெருமாள், அவரது மகன் ராஜன் (எ) வரதராஜனுக்கு தெரிந்தது.

இவர்களது காதலுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்பரசையும் கடுமையாக எச்சரித்தனர். இது சம்பந்தமாக, அவர்களுக்குள் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் அன்பரசன், அவரது அண்ணன் சிலம்பரசன் ஆகியோரை வரதராஜன் தாக்கியுள்ளார். இதையறிந்த இன்பரசன், வரதராஜனை தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன், இன்பரசுவை கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டியது தெரிந்தது. இந்நிலையில், கொலையாளிகளை கைது செய்யாததை கண்டித்து இன்பரசுவின் உறவினர்கள்,  பழையசீவரம் பெரிய காலனி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் திரண்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து பாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, ‘இன்பரசு கொலையில், வரதராஜன் உள்பட 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என ஆவேசமாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்து மறியலி ஈடுபட்டனர். அதற்கு போலீசார், விரைவில் அவர்களை கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதையடுத்து 4 மணி நேரத்துக்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், இன்பரசு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வரதராஜன் (30), அவரது கூட்டாளிகள் செந்தில் (27), ஜான்சன் (23), ராஜதுரை (29), விக்னேஷ்(24)ஆகியோர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, சிறையில் உள்ள 5 பேரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பாலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.      இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.

Tags : relatives ,court ,Tanjore ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...