×

உயிருக்கு போராடியவருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய நெல்லை எஸ்ஐக்கு மக்கள் பாராட்டு

சுரண்டை, செப். 30:  சுரண்டை அருகே ஊத்துமலை, ரதமுடையார் குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சகாயம் (45). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. டீக்கடை நடத்தி வரும் சகாயத்துக்கு கடந்த 5 மாதத்திற்கு முன் காலில் ஆணி குத்தியது. இதை சரியாக கவனிக்காததால், செப்டிக் ஆனது. கடந்த மாதம் வலி அதிகமானதால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், உயிரை காப்பாற்ற காலை எடுக்க வேண்டுமென கூறினர். அறுவை சிகிச்சையின் போது ரத்தம் அதிகம் வீணாகும். அவரது ரத்த வகையான ‘பி பாசிட்டிவ்’ ரத்தத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தனர். சகாயத்தின் உறவினர்களால் ரத்தத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை.

இதனிடையே உறவினர் அருள் என்பவர், நெல்லை தாய் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டனுக்கு சகாயத்தின் சூழ்நிலை குறித்து செல்போனில் தகவல் கூறினார். அவர், அதிக முறை உதிர தானம் செய்த, நெல்லையில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ வாசுதேவனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற எஸ்ஐ வாசுதேவன், ரத்த தானம் செய்தார். மேலும் அறுவை சிகிச்சை முடியும் வரை மருத்துவமனையில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து ஆறுதல் கூறினார். எந்த உதவி தேவை என்றாலும் உடனடியாக தயங்காமல் கூப்பிடுமாறு தெரிவித்து தனது செல்போன் எண்ணையும் தந்துள்ளார்.

ரத்த முறை உறவுகளே உதவ முன்வராத நிலையில், காவல்துறை அதிகாரி உதிரம் கொடுத்து ஆபரேஷன் முடியும் வரை உடனிருந்து ஆறுதல் தெரிவித்தது சகாயத்தின் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடைய செய்தது. காக்கிச்சட்டைக்குள் ஒளிந்திருக்கும் ஈரத்தைக் கண்டு மருத்துவமனையில் இருந்த அனைவரும் அவரை பாராட்டினர்.

‘‘எப்போது கூப்பிட்டாலும்  ரத்த தானம்’’
தாய்த்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக அறக்கட்டளை மூலம் ஏழை எளியோரின் மருத்துவத்திற்கு உதவி செய்து வருகிறோம். எஸ்ஐ வாசுதேவன், நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் மறுக்காமல் வந்து ரத்தம் கொடுத்துள்ளார். பி பாசிடிவ் ரத்தம் அரிய வகை என்பதால் நாங்கள் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் ரத்தம் கொடுப்பார். தற்போது அறுவை சிகிச்சை மூலம் காலை இழந்துள்ள சகாயம், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது மனைவியும் சற்று ஊனமானவர் என்றார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு