×

நிலப்பிரச்னை தகராறு ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி, செப். 30:     நிலப்பிரச்னை தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ரவி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கும் நில பிரச்னை இருந்து வந்துள்ளது. கந்தசாமி, ரவி ஆகிய இருவரது பெயரில் கூட்டுபட்டா உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்துக்கு உரிய ஆவணங்கள் கந்தசாமியிடம் உள்ளதாகவும், இதனால் ரவி பெயரில் உள்ள நிலத்தை கூட்டுபட்டாவில் இருந்து நீக்குவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கந்தசாமி முறையிட்டுள்ளார். ஆனால் பிரச்னைக்கு உரிய நிலம் தனக்கு சொந்தமானது என ரவி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பிரச்னைக்கு உரிய இடத்தை அளவீடு செய்தனர். இதற்கு ரவி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  அதனையும் மீறி வருவாய்த்துறையினர் அளவீடு பணி மேற்கொண்டதால் ரவி, தனது குடும்பத்தோடு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ளபோவதாக தெரிவித்துள்ளார். இதனால் நில அளவீடு பணிகள் பாதியில்
நிறுத்தப்பட்டன. கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ரவி(45), அவரது குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்(26), ராமாயி(65), மேகலா(28), தனக்கோடி(23), யோகேஷ்(3), பரணி(1), ஹர்த்திக்(3), தாரணி(1) உள்பட 10 பேர் வருவாய்துறை, காவல்துறையை கண்டித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.

தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்ரமணியனிடம் முறையிட்டனர். தொடர்ந்து ரவி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நிலப்பிரச்னையில் 4 குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : suicide ,office ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை