×

குமரியில் செயல்படாத மெடிக்கல் பெயரில் கொள்முதல் வீடுகளுக்கே நேரடியாக போதை ஊசி சப்ளை

நாகர்கோவில், செப்.30: நாகர்கோவிலில் கஞ்சா, போதை ஊசி கும்பலிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாகர்கோவில் வடசேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளீஸ்வரி, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் கடந்த 27ம்தேதி இரவு வடசேரி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், கார் ஒன்றை சோதனை செய்தனர். போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட, காரில் இருந்த நாகர்கோவில் கட்டையன்விளை காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (55), மேலபுத்தேரி பகுதியை சேர்ந்த சரவணன் (23), பறக்கை எம்.எம்.ேக. நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற மணிகண்டன் (33), திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா (31), திருநெல்வேலி கருங்குளம்  கண்ணன் (46) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். காரில் சோதனை நடத்திய போது  2.25 கிலோ கஞ்சா மற்றும் ஊசி மருந்துகள், சிரஞ்ச் பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

இந்த ஊசி மருந்துகள் அனைத்தும் மருத்துவமனைகளில் வலி நிவாரணம் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக பயன்படுத்த கூடியதாகும். இதை இந்த கும்பல் போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் தப்பி ஓடியது நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்த சேகர் என்ற லோடுமேன் சேகர், சரத் ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு லோடு மேன் சேகர் மற்றும் சரத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், ஆசாரிபள்ளத்தை சேர்ந்த மரிய அற்புதம் என்பவர் மூலம் தான் ஊசி மருந்துகள் கிடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து மரிய அற்புதத்தையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : மரிய அற்புதம் இந்த போதை கும்பலுக்கு தலைவனாக இருந்துள்ளார். இவர், ஆசாரிபள்ளத்தில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் பைனான்ஸ் நடத்தி உள்ளார். ஆனால் தொழில் முடக்கத்தால், இவற்றை மூடினார். பின்னர் அந்த மெடிக்கல் ஸ்டோருக்கான லைசென்சை வைத்து ஊசி மருந்துகளை வாங்கினார். இவருக்கு மருந்துகள் பற்றி நன்றாக தெரியும். என்னென்ன மருந்துகள் பயன்படுத்தினால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிந்ததால், அதன் மூலம் தனக்கு தெரிந்த மருந்து விற்பனை பிரதிநிதிகள்  மூலம், ஊசி மருந்துகளை வாங்கினார். ஏற்கனவே இவர் நடத்தி வந்த மெடிக்கல் ஸ்டோர் பெயரில் இதற்கான பில் போடப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை லோடுமேன் சேகர் மூலம் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்துள்ளார். இவர்களிடம் ரெகுலர் கஸ்டமர்களும் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சப்ளை செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப் குழுவும் வைத்துள்ளனர். அதில் நேரடியாக இல்லாமல், ரகசிய குறியீடுகள் மூலம் தகவல்களை பரிமாறி உள்ளனர்.

இந்த கும்பலின் பிடியில் வேறு யார், யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வில்லை. பெண்களுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. இவர்களின் மொபைல் எண்களுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.  கைதான 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து நாகர்கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி சப்ளையர்கள் தொடர்பான பட்டியல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும், டி.எஸ்.பி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Tags : households ,Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...