×

2395 பேருக்கு ஆடுகள் வழங்கப்படுகிறது 400 கறவை பசுக்கள் இலவசமாக வழங்க திட்டம்

நாகர்கோவில், செப்.30: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் இலவச கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020- 2021-ம் ஆண்டிற்கு 400 கறவைப்பசுக்கள் வழங்க தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சைமன்காலனி, கக்கோட்டுதலை, தலக்குளம், முள்ளங்கினாவிளை, சூழால், குளப்புறம், கண்ணனூர், குருந்தன்கோடு ஆகிய கிராம ஊராட்சிகளில் இருந்து ஒரு ஊராட்சிக்கு 50 பயனாளிகள் வீதம் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.  மேலும் இலவச வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2395 பயனாளிகளுக்கு ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம் வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு இனையம்புத்தன்துறை, பாலூர், தெரிசனங்கோப்பு, புலியூர்சாலை, இராமபுரம், வெள்ளிச்சந்தை, வாவறை, இராஜாக்கமங்கலம், பேச்சிப்பாறை,

திக்கணங்கோடு, சாமிதோப்பு, வெள்ளாங்கோடு, விளாத்துறை, சுருளக்கோடு, திடல், தேரேகால்புதூர், விளவங்கோடு, ஏற்றக்கோடு, திருப்பதிசாரம் ஆகிய 19 கிராம ஊராட்சிகளில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு கிராம அளவிலும் கிராம நிலைக்குழு உறுப்பினர்களாகிய கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர், வயதில் மூத்த ஆதிதிராவிட உறுப்பினர், ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்பாளர், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அப்பகுதி கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரிடம் விண்ணப்பங்கள்வழங்கலாம். விண்ணப்பங்கள் இக்குழு முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி வாய்ந்த பெண்கள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும்  திருநங்கை பயனாளிகள் (18 முதல் 60 வயதுக்குள்) இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்த பயனாளிகளுள் 30 சதவீதம் ஆதிதிராவிட பயனாளிகளாக இருப்பார்கள். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன் கிராம ஊராட்சி உறுப்பினர்களிடம் விண்ணப்பங்கள் அக். 2க்குள் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு