×

பொருட்கள் வழங்க தாமதம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு மறியல்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி கடைவீதி ரேசன் கடையில், பொருட்கள் வழங்க தாமதம் ஆனதால், கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தர்மபுரி நகராட்சி கடைவீதி புதூர் மாரியம்மன்கோயில் தெருவில் ரேஷன் கடை உள்ளது. இக்கடையில் கடைவீதி, கீழ்வீதி, அரிகரநாதர் கோயில்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய்,கோதுமை உள்ளிட்ட பொருட்களை, 850 குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த 21ம் தேதி முதல் பயோமெட்ரிக் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நுகர்வோர் கைரேகை பதிவு செய்து, பொருட்கள் வாங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

மேலும், வரிசையில் மக்கள் நீண்ட நேரம் நின்று பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளது. இதனால் அனைவருக்கும் பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று மதியம் பொதுமக்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருந்தும், பொருட்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ரேசன் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் வருவாய்துறை, வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் கூடுதல் விற்பனையாளர் வரவழைத்து, பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags : ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா