×

கால்வாயை தூர்வாரக்கோரி போராட்டத்தில் குதித்த கிராமமக்கள் காரியாபட்டி அருகே பரபரப்பு

திருச்சுழி, செப்.30: காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் பெரிய கண்மாய் சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுடையது. இந்த கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். முடுக்கன்குளம் கண்மாயில் கடந்த ஆண்டு குடிமராமத்து மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. ஆனால் வி. நாங்கூர் முதல் முடுக்கன்குளம் வரை முழுவதுமாக வரத்துக்கால்வாய் செப்பனிடப்படவில்லை. அப்போது பொதுமக்கள் கோரிக்கை வைத்தபோது, அடுத்த ஆண்டு கால்வாய் பணி செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை பணி செய்யப்படவில்லை. மேலும் வி.நாங்கூர் கண்மாய் முதல் முடுக்கன்குளம் கண்மாய் வரை செல்லும் வரத்து கால்வாய் பாதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை முறையாக வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தூர்வார வேண்டும் என்று முடுக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பஸ் நிலையம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை மறுதினம் போலீஸ் பாதுகாப்போடு வருவாய்த்துறையினரை வைத்து கால்வாய் அளவீடு செய்யப்படும் என்றும் பொதுப்பணித் கால்வாய் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதன் பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : canal ,Kariyapatti ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்