×

ஜவ்வாய் இழுக்கும் சாலை பணி ஜல்லி கொட்டியாச்சு...தார் ஊற்றுவது எப்போது? 2 கிமீ சுற்றி செல்லும் கிராமமக்கள்

அருப்புக்கோட்டை, செப்.30: அருப்புக்கோட்டை அருகே சாலை போடும் பணி மந்தகதியில் நடப்பதால் கிராமமக்கள் சிரமப்படுகின்றனர். அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளம், தொட்டியாங்குளம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து கட்டிட வேலைக்கும், மில் வேலைக்கும், பூ, காய்கறி, மார்க்கெட்டிற்கும், பாலையம்பட்டி மற்றும் அருப்புக்கோட்டைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பொய்யாங்குளம், தொட்டியாங்குளம் உள்ளது. இந்த இணைப்புச்சாலையில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டி பரப்பி வைத்துள்ளனர். ஒரு மாதமாகியும் ரோடு போடும் பணி முடியவில்லை.

இந்த கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ரோடு போடும் பணி மந்தகதியில் நடப்பதால் 2 கிமீ தொலைவிற்கு வேறு கிராமங்கள் வழியாக பாலையம்பட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசரத்திற்கு கூட செல்ல முடியவில்லை. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுவதுடன் எரிபொருள் செலவும் கூடுதலாகிறது. எனவே இந்த இருசாலை பணியையும் விரைந்து முடிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jawwai ,
× RELATED வத்திராயிருப்பில் போக்குவரத்து...