×

திருப்புல்லாணி ஒன்றிய கூட்டத்தில் 8 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கீழக்கரை, செப்.30:  திருப்புல்லாணி ஒன்றிய கூட்டத்தில் 8 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புல்லாணி ஒன்றிய சாதாரண குழுக்கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டம் தொடங்குவதற்கு தயாரான நிலையில் இருந்த போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கவுன்சிலர் பைரோஸ்கான் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசி, மத்திய,மாநில அரசின் நிதிகளை முறையாக வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மன்ற உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல் மாவட்ட நிர்வாகம் நேரடியாக, ஒன்றிய பொதுக்கணக்கில் இருந்து பணியை தேர்வு செய்வது கண்டிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகத்தின் தன்னிச்சை போக்கை எதிர்த்து கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினார்.

அதிமுக கவுன்சிலர் பிரேமா சரவணன்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் திருப்புல்லாணி ஒன்றியத்தில் பொது நிதியில் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடந்துள்ளது. இதுகுறித்து கடந்த கூட்டத்தில் மன்ற பொருளில் எதுவும் தெரிவிக்க வில்லை. இந்நிலையில் தற்போது பணம் வழங்குவதற்கு மட்டும் தீர்மானமாக கொண்டு வந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. வாக்களித்த மக்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் நாகநாதன், கமலா கருப்பையா,பிரேமா சரவணன், முனியாயி செவத்தான், ரஞ்சனி செல்லத்துரை, சுமதி ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் எங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி விட்டு வெளியே சென்றனர்.

மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவரும் வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றியத்தில் மொத்தம் 14 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். எட்டு பேர் வெளிநடப்புச் செய்து விட்டதால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் மீதமுள்ள 5 ஒன்றியக் கவுன்சிலர்களுடன் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் இருந்தால் தீர்மானம் நிறைவேற்ற முடியும். கூட்டத்திற்கான வருகைப் பதிவேட்டில் அனைத்து கவுன்சிலர்களும் கையெழுத்திட்டுள்ளனர். எட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் மீதமுள்ள கவுன்சிலர்களை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூறினர்.

Tags : councilors ,union meeting ,Thirupullani ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்