×

உடுமலையில் வீடு புகுந்து தாக்கி ரூ.17.5 லட்சம், 38 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு

உடுமலை, செப்.30: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு எலையமுத்தூர் பிரிவில் வசிப்பவர் பழனிச்சாமி (70). இவர், உடுமலை நகரில் 2 இடங்களில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (65). கடந்த மே மாதம் 23ம் தேதி இரவு பழனிசாமி, தனது வீட்டில் மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.  அப்போது 3 முகமூடி கொள்ளையர்கள் இவர்களது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். லாக்கரில் வைத்திருந்த ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தனர். சத்தம் கேட்டு எழுந்த பழனிச்சாமியை கொடுவாளை காட்டி மிரட்டி, தாக்கினர். பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த கார்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர், காரை மட்டும் வழியில் விட்டு சென்றனர். இது குறித்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால், நான்கு மாதமாகியும் இக்கொள்ளை குறித்து துப்பு துலங்கவில்லை. இதேபோல், கடந்த 4ம் தேதி உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலை செல்லும் சாலையில் உள்ள போடிபட்டி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளரான ராஜகோபால் (70), அவரது மனைவி லட்சுமி பிரபா (63) ஆகியோர் வீட்டில் அதிகாலை புகுந்த முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 38 பவுன் தங்க நகைகளையும், ரூ.1.5 லட்சத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்த வழக்கிலும் இதுவரை போலீசார் ஒருவரைகூட கைது செய்யவில்லை. ஆனால் கடந்த வாரம் அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று அரிவாள் மற்றும் துப்பாக்கியைக் காட்டி காரில் கடத்தி சென்றது. இதில், துப்பு துலக்கிய போலீசார் 4 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்தனர். இதேபோல் மற்ற வழக்குகளிலும் வேகம் காட்ட வேண்டும், என  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Udumalai ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்