×

குழாய் உடைந்து சாக்கடையில் கலக்கும் குடிநீர்

திருப்பூர், செப்.30: திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளிலும் 2-வது குடிநீர் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் தண்ணீரும், 3-வது குடிநீர் திட்டத்தின்கீழ் பவானி தண்ணீரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆழ்குழாய் மூலமாகவும் உப்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளுக்கு இன்னும் 2வது திட்ட குடிநீர் வசதியே இல்லாத நிலை உள்ளது. குடிநீர் சீராக வழங்கக் கோரி பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, அம்மாபாளையம் அருகே ஏற்பட்ட உடைப்பு பெரியளவில் உள்ளது. இதில் இருந்து அதிக குடிநீர் வெளியேறி ரோட்டில் சென்று, சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகிறது. நாள் முழுவதும் குடிநீர் சப்ளையாகும் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து அம்மாபாளையம் பகுதி மக்கள் கூறியதாவது: திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஆனால், அவிநாசி ரோட்டில் பல மாதங்களாக பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரவும் பகலும் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த வழியாக உயர் அதிகாரிகள் பலமுறை சென்று வந்தாலும் குடிநீர் வீணாவதை இதுவரை தடுக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா