×

ஊட்டியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை மருத்துவ குழுவினர் ஆய்வு

ஊட்டி, செப். 30:  ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தால் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். ஊட்டி எச்.பி.எப். அருகே 40 ஏக்கரில் ரூ. 447.32 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் துவக்கி வைத்தார். மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் ரூ.141.30 கோடியிலும், மருத்துவமனை கட்டிடம் ரூ.130.27 கோடியிலும், குடியிருப்பு மற்றும் விடுதி கட்டிடங்கள் ரூ.175.75 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ளது. மருத்துவக்கல்லூரி அமைய உள்ள பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்பூர மரங்களை வெட்டி அகற்ற டெண்டர் விடப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு அங்கு நிர்வாக கட்டிடங்கள் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை துணை முதல்வர் மருத்துவர் முருகேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று மருத்துவக்கல்லூரி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின் கோவை இ.எஸ்.ஐ. கல்லூரி துணை முதல்வர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   ஊட்டியில் கட்டப்படும் அரசு மருத்துவ க்கல்லூரி கட்டுமான பணிக்கான திட்ட வரைபடம், எந்தெந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்றன? என பார்வையிட்டோம். இயற்கை சூழ்ந்த இடத்தில் இக்கல்லூரி அமைய உள்ளது. ஊட்டி நகருக்கு மிக அருகில் 4 கி.மீ. தொலைவில் அமைகிறது. தற்போது கட்டுமான பணிகள் துவக்க நிலையில் உள்ளது. மருத்துவமனை கட்டிடத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை முதல் ஆண்டிற்கு தேவையான 3 துறைகள் அனாட்டமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்க உள்ளனர். இதனால் ஒரே சமயத்தில் 180 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு அறை அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கவுன்சில் ஆய்வின் போது இதுபோன்ற சிறு சிறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்.

இதுதவிர விடுதிகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் வரவுள்ளது. நடந்து செல்லும் இடைவெளியில் மருத்துவமனையும், கல்லூரியும் அமைகிறது. திறந்தவெளி இடங்களில் மரங்கள் நடவு செய்வதுடன், உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா?, கூடுதல் வசதிகள் தேவையா? என்பது குறித்து ஆலோசனைகள் தெரிவிப்பதுதான் எங்கள் குழுவின் நோக்கம். பணிகள் எவ்வளவு விரைவாக முடிகிறது என்பதை பொறுத்து நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு கோவை இ.எஸ்.ஐ. கல்லூரி துணை முதல்வர் முருகேசன் கூறினார்.

Tags : team ,Ooty ,Government Medical College ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின்...