×

நீலகிரியில் கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்ைக

ஊட்டி, செப். 30:  நீலகிரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோவிட் கேர் மையங்களின் (கொரோனா சிகிச்சை மையங்கள்) எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, கிராமப்புறங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிக தொற்று பதிவாகி வருகிறது.

 நீலகிரியில் நேற்று முன்தினம் நிலவரப்படி 3944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2989 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரப்படுத்தப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா மருத்துவ பரிசோதனையின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோவிட் கேர் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவனையும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. சிகிச்சையளிப்பதற்காக தனியார் மண்டபங்கள், பள்ளிகளில் கோவிட் கேர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் கேர் மையங்களில் ஆக்சிஜன் லைன் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஊட்டி அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனையிலும் 60 படுக்கை வசதிகள் உள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

இதுதவிர எஸ்டேட் மருத்துவமனைகளையும் பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவைகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் என்பதால், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை அதிகரிக்கப்பட்டு வருகிறது.தற்போதைய சூழலில் போதுமான வசதிகள் உள்ளன. லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்களது வீடுகளில் தேவையான வசதிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். நாள்தோறும் அவர்களின் உடல்நிலையை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiris ,corona treatment centers ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...