×

கிராமப்புறங்களில் சுகாதார வளாகங்களை பராமரிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, செப். 30:  பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு ஊராட்சி குக்கிராமங்களில், ஒன்றிய நிதி மற்றும் எம்.எல்.ஏ. நிதி, ஊராட்சி நிதி என பல்வேறு நிதி மூலம், சுமார் 25 ஆண்டுக்கு முன்பு சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டுமே சுகாதார வளாகம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. பிற அனைத்து ஊராட்சி கிராமங்களிலும் அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்களுக்கு போதிய தண்ணீர் வசதியின்றி முறையாக பராமரிக்காமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சில இடங்களில் புதர்கள் சூழ்ந்து காடுபோல் உள்ளதால், சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழித்தடம் உருமாறி போயுள்ளது. பல்வேறு கிராமங்களில் இன்னும் திறந்த வெளியை பலர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரித்து தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அதிகாரிகள்  கிடப்பில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தில் பேனர்கள் மற்றும் சுகாதாரமான கிராமம் என போர்டு வைக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், அடித்தட்டு மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட சுகாதார வளாகத்தினை முறையாக சீர்படுத்தி பயன்பட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : health facilities ,areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை