×

மான்கறி சமைத்த இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்


பெ.நா.பாளையம், செப்.30:  பெரியநாயக்கன்பாளையம் அருகே தோட்டத்தில் மான்கறி சமைத்த இருவருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை மலை அடிவாரத்தில் உள்ள கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மான்கறி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது மான்கறி சமைத்து சாப்பிட்டிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அங்கு தோட்ட வேலை செய்து வரும் கோவனூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி இந்திராணி (55), நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ராஜப்பன் மனைவி சாந்தாமணி (44) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மான் ஒன்றை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்து கொன்று விட்டதாகவும், இறந்த மானின் மாமிசத்தை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 5 கிலோ மான்கறி பறிமுதல் செய்து இருவருக்கும் தலா 10 ஆயிரம் என 20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.  

மான் வேட்டையாடினால் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் உள்ளது.   நாய்கள் கடித்து மான் உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என உரிய விசாரணை நடத்தாமல் பெண்கள் என காரணம் காட்டி அபராதம் மட்டும் விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாய் கடித்து மான் இறந்தாலும் வானத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். சமைத்து சாப்பிடுவது தண்டனைக்குறிய குற்றமாகும். பிரபலமான ஒருவரின் தோட்டம் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் வனத்துறை மீது குற்றம் சாட்டுகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு