×

அக்.1ம் தேதி முதல் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

ஈரோடு, செப். 29:  பள்ளிகள் திறப்பையொட்டி வருகின்ற அக்.1ம் தேதி முதல் கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடந்து வந்தது. அதன் பின்னர் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதலில் மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்து நடைபெற்றது. பின்னர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து துவங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் உள்ள 11 பணி மனைகளில் மொத்தம் 800 பஸ்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 150 உள்ளூர் பஸ்களும், 100 வெளி மாவட்ட பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது மாவட்டத்திற்குள் 250 பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு 150 பஸ்கள் என 400 பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர 200க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட பஸ்கள் ஈரோட்டுக்கு வந்து செல்கின்றன. இதனிடையே வருகின்ற அக்.1ம் தேதி முதல் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து 1ம் தேதி முதல் நிலைமைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் 1ம் தேதி முதல் 269 தனியார் பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை