×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், செப்.26:திருப்பூர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2021ம் ஆண்டு ஜன.1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆகவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் போன்றவை தொடர்பாக கீழ்கண்ட படிவங்களில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விரும்புவோர் குடியிருப்பு ஆதாரம் மற்றும் வயதிற்கான ஆதார சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் படிவம்-6யை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து ஆட்சேபணை செய்வதற்கும் படிவம் 7யை பூர்த்தி செய்ய வேண்டும். பெயர், வயது, பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய படிவம் 8யை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒரே தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள், புதிய குடியிருப்பு பகுதியில் வாக்காளராக பெயர் சேர்க்க புதிதாக குடிபெயர்ந்த பகுதிக்குரிய குடியிருப்பு சான்றிதழ் ஆதாரத்துடன் படிவம்-ஏ வில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட படிவங்களை www.nvsp.in என்ற முகவரியினை பயன்படுத்தி ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும், திருப்பூர் கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலகங்களான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் வாக்காளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப் பணியானது வரும் அக்.31ம் தேதியுடன் நிறைவு பெற்றபின் வரைவு வாக்காளர் பட்டியல் நவ.16ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் 2021ம் ஆண்டு ஜன.20ம் தேதியும் வெளியிடப்படும்.

Tags :
× RELATED ஒத்தக்கடையில் பெயர் பலகையை அகற்றியதால் மறியல்