×

ஜல் ஜீவன் மிசன் திட்டத்தில் முதற்கட்டமாக 1.29 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கலெக்டர் தகவல்

திண்டுக்கல், செப். 25: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிசன் திட்டத்தில் 2020-21ம் ஆண்டில் முதற்கட்டமாக 1.29 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சி அருணாசலபுரத்தில் 73 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் நடைபெறும் பணியினையும், கவுண்டன்பட்டியில் 432 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு ரூ.26.34 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பொருட்களின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘மத்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசுடன் இணைந்து 2024ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு ‘ஜல் ஜீவன் மிசன்’ என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியம், 306 கிராம ஊராட்சிகளில் மொத்தமுள்ள 3084 கிராமங்களில், 2020-21ம் நிதிஆண்டில் முதற்கட்டமாக 1,29,419 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு இலக்காக எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.38.39 கோடியில், 119 கிராம ஊராட்சிகளில் 341 கிராமங்களில் 53,383 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கிட பணிகள் நடந்து வருகிறது.

இதில் 17 கிராம ஊராட்சிகளில் 102 கிராமங்கள் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு தன்னிறைவு அடையப்படும். இதேபோல், ஜல் ஜீவன் மிசன் அல்லாத இதர திட்டங்களான, மத்திய நிதிக்குழு மான்யம், கனிம நிதி மற்றும் பிற நிதிகளை ஒருங்கிணைத்து அத்திட்டங்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ரூ.60.55 கோடி மதிப்பில் 996 கிராமங்களில் 76,750 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடுதல் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 23 ஊராட்சிகள் 100 சதவீதம் இணைப்புகள் வழங்கப்பட்டு தன்னிறைவு அடையப்படும். 161 ஊராட்சிகளில் குறைந்தபட்சம் ஒரு கிராமம் 100 சதவீதம் முழுமை அடையப்படும்’ என்றார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சேதுராமன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : households ,phase ,
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்