×

பஞ்.தலைவர்கள் தொடர்ந்த வழக்கால் தர்மபுரியில் இ-டெண்டர் முறைக்கு தடை விதிப்பு

தர்மபுரி, செப்.25: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 ஊராட்சி மன்றத்தலைவர்கள் இ-டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், வரும் 30ம் தேதி நடக்க இருந்த இ- டெண்டரை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அடிலம், பிக்கனஅள்ளி, முக்குலம், பெரியாம்பட்டி, சிடி பெட்டம், எம்.செட்டிஅள்ளி, நார்த்தம்பட்டி, பாளையம்புதூர் உள்ளிட்ட 24 ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி தீர்மானம் இல்லாமல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இ-டெண்டர் விடுவதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 13ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

அதில், கலெக்டர் மூலமாகவே, டெண்டர் கோருவது, குறிப்பாக சாலை பணிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளை புறக்கணிப்பது போன்ற கலெக்டரின் செயல்கள், ஊராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பானது. ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் செயல். எனவே, கலெக்டரிடன் டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து, அனைத்து பணிகளையும் ஊராட்சி மூலமாகவே, ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகளை முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். வரும் 30ம் தேதியில் நடக்க இருந்த இ-டெண்டர் முறைக்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை திமுகவை சேர்ந்த தர்மபுரி முன்னாள் எம்பியும், வக்கீலுமான தாமரைச்செல்வன் ஆஜராகி வாதாடினார்.

Tags : leaders ,Dharmapuri ,Panch ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...