×

ஆற்காடு அலுவலகத்தில் பரபரப்பு கிசான் திட்ட முறைகேட்டில் வேளாண் உதவி அலுவலர் கைது மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

வேலூர், செப்.25: கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆற்காடு வேளாண் உதவி அலுவலரை வேலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமர் கிசான் திட்டத்தில் ₹120 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாத நபர்கள் இந்த திட்டத்தில் போலியாக சேர்ந்து உதவித்தொகை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலியாக சேர்ந்துள்ள நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப வசூலிக்கும் பணி அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்லாதவர்கள் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை ₹3 கோடி வரை தகுதியற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வேளாண் துறையில் தற்காலிக கணினி ஆபரேட்டர்களாக பணியாற்றிய 8 பேர் ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் கொண்ட பட்டியலை வேளாண்மைத்துறை, சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட சிபிசிஐடியினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை சேர்ந்த, சோளிங்கர் உதவி வேளாண் அலுவலகத்தில் தற்காலிக கணிணி ஆபரேட்டராக பணியாற்றிய சுப்பிரமணியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் திருவலத்தில் மாமனார் வீட்டில் தனியாக கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்(30) என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் உதவி அலுவலராக ராஜசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், அங்குள்ள மோசடி கும்பலுடன் தொடர்பு வைத்து கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு முறைகேடாக உதவி தொகை பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளை வேலூர் சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராஜசேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திமிரி வட்டாரத்தை சேர்ந்த 2 நபர்கள் பொதுமக்களிடம் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டும், விண்ணப்பங்களை பெற்றும் வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் சிபிசிஐடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கலவை சேர்ந்த தற்காலிக கணிணி ஆபரேட்டரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து வேளாண்மை துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவத்தால் அதிகாரிகளும், ஊழியர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : CBCID ,arrest ,Arcot ,assistant officers ,
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...