×

உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது சென்னையை சேர்ந்த 2 பேர் பரிதாப பலி போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை, செப். 25: உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் சாய்பாலாஜி (49). இவர் தனது நண்பர்களான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முருகவேல் (53), டி.நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராமன் (49) ஆகியோருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்றனர். இந்த காரை முருகவேல் என்பவர் ஓட்டி வந்தார். கார் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது காரின் டயர் திடீரென வெடித்ததில் கார் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த சிறுபாலத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டி வந்த முருகவேல், காரில் வந்த சாய்பாலாஜி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுந்தர்ராமன் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ஜெகதீசன் மற்றும் போலீசார் விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,Chennai ,flat tire ,Ulundurpet ,
× RELATED திருச்செங்கோடு அருகே நிலை தடுமாறி...