×

குஜிலியம்பாறையில் கொரோனா புரிதல் இல்லாததால் மாஸ்க், சானிடைசர் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள் விழிப்புணர்வை தீவிரப்படுத்த கோரிக்கை

குஜிலியம்பாறை, ஆக. 22: இந்தியா முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சோப்பு அல்லது ஹேண்ட் வாஷ் மூலம் கைகளை கழுவ வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் முகக்கவசம், கை கழுவ உதவும் சானிடைசர், சோப் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். அதன்படி குஜிலியம்பாறை, பாளையம், டி.கூடலூர். கோவிலூரில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் வழக்கமாக வாங்கப்படும் சாதாரண மருந்து, மாத்திரைகளை விட முகக்கவசம், சானிடைசர், சோப் ஆகியவற்றை வாங்கத்தான் பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். அனைத்து தரப்பு மக்களும் ஒரே நேரத்தில் வாங்க ஆர்வம் காட்டியதால், கடைகளில் இப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து கடைகள், மெடிக்கல் ஷாப்களில் கிருமி நாசினி பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. ஆனால் தற்போது மக்களிடையே கொரோனா குறித்து புரிதல் இல்லாததால் சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றனர். இதன் காரணமாக  கிருமி நாசினி பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வில் தீவிரம் காட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...