×

எட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்


எட்டயபுரம், மார்ச் 20: எட்டயபுரம் அருகே தலைக்காட்டுப்புரம் பஞ்சாயத்து பகுதியில் முற்றிலும் சேதமடைந்து விழும்நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பம் விரைவில் மாற்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.
 எட்டயபுரம் அருகே தலைக்காட்டுப்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட த.புதுப்பட்டி நடுத்தெருவில் அமைக்கப்பட்ட மின்கம்பம் முறையான பராமரிப்பின்றியும், தொடர் மழையாலும் துருபிடித்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மேலே செல்லும் மின்கம்பிகளின் பலத்திலேயே நிற்பதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் இந்த மின்கம்பம் அருகேயுள்ள  குடிநீர் குழாய்க்கு அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதனால் அவதிப்படும் மாணவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள், ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பலனில்லை. எனவே, இனியாவது இதுவிஷயத்தில் தலையிட்டு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்குமுன்னர் ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.  

Tags : Ettayapuram ,
× RELATED சிறுபுழல்பேட்டை பகுதியில் உடைந்து விழும் ஆபத்தில் மின்கம்பம்