×

ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு

ஆலங்குளம், மார்ச் 20: தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கொரோனா வைரஸ் குறித்து ஆலங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு வந்த கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அங்குள்ள ஓட்டல் மற்றும் சுகாதார வளாகம் ஆகியவற்றை சோதனை செய்தார். அங்கு நின்ற பஸ்களில் தினமும் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படுகிறதா என டிரைவர்களிடம் விசாரித்தார். அப்போது பஸ்நிலையத்தில் சுகாதார வளாகம் அருகில் பொதுமக்கள் கைகழுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கும்படி பேரூராட்சிக்கு அறிவுறுத்தினார்.

 தொடர்ந்து நல்லூர் தனியார் வில்பவர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் கொரோனோ எவ்வாறு வருகிறது? நாம் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு குறித்தும் கலந்துரையாடினார். அப்போது கொரோனோ வைரஸ் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். உங்களின் கிராமப் பகுதிக்கு கொரோனா ைவரஸ் தாக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்து யாரேனும் வந்தால் அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் கொடுங்கள். தொடர்ந்து அவர்களிடம் கை கழுவும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

பின்னர் குறிப்பன்குளம் சென்று அங்குள்ள ஆட்டோகளில் தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா? கடைகளில் கை கழுவ சோப்பு தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டார். நெட்டூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நடைபெறும் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வெங்கடேஷ்வரபுரம் (எ)ரெட்டியார்பட்டி சென்று அங்குள்ள கடைகளில் நின்ற பொது மக்களிடம் கொரோனோ விழிப்புணர்வு குறித்து பேசினார். அப்போது கலெக்டருடன் நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் .சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சங்கரகுமார், சுகாதார ஆய்வாளர் கங்காதரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Corona ,Alangulam ,area ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...