×

குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

தோகைமலை, மார்ச் 20: தோகைமலை பகுதியில் குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியை தொடங்கி உள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் உள்ள நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூரியனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிபட்டி உள்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பருவமழை முறைப்படி பெய்தால் மேற்கண்ட பகுதிகளில் விவசாய பணிகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைவால் காவிரியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆற்றிலிருந்து கரூர் கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் இருந்துவரும் காவிரிநீர் பெருமளவில் நிறுத்தப்பட்டது. இதனால் கட்டளைமேட்டு வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியில் முழுமையான விவசாயம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கிணற்று பாசனங்கள், குளத்து பாசனங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்துவிட்டது. தற்போது போரவெல் அமைத்த கிணறுகளில் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவில் பருவமழை பெய்ததால் சம்பா சாகுபடி செய்து கடந்த தை மாதத்தில் அறுவடையை முடித்தனர். ஆனால் அதன் பிறகு வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் குறுவை சாகுபடியை நிறுத்தி விட்டனர். இதனால் போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் தை மாதங்களில் நெல் அறுவடையை முடித்துக்கொண்ட பிறகு மாசி மாதம் கடைசியில் தொடங்கி பங்குனி மாதத்தில் செஞ்சோளம் நாற்றுகளை வயல்களில் நடவு செய்து வருகின்றனர். இதில் சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது வரப்பு எடுத்து நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 90 நாட்களில் மகசூல் பெறக்கூடிய இச்சோளப்பயிர்களுக்கு முதல் கட்டமாக இடைப்பட்ட களை எடுக்கப்படுகிறது.

பின்னர் அதிக மகசூல் பெற யூரியா மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களை வயல்களில் தெளிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த பயிர்களுக்கு செங்கரையான் என்ற நோய் தாக்கும் போது நோய் தாக்கத்திற்கு ஏற்றவாறு மருந்து கடைக்காரர்களின் ஆலோசனையின்படி மருந்துகள் தெளித்து நோய்களை கட்டுப்படுத்துவதாகவும் கூறுகின்றனர். சோளப்பயிர்களுக்கு வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டு பாய்ச்சினால் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ எடை கொண்ட 8 முதல் 10 மூட்டை சோளம் அறுவடை செய்தாலே நல்ல மகசூல் என்று கூறும் விவசாயிகள், தற்போது போதிய மழை இல்லாததால் சில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் சோளம் சாகுபடியை குறைத்து விட்டதாகவும் தெரிவித்தனர். மனிதர்களுக்கு நல்ல உணவு பொருட்களாகவும், கோழி மற்றும் மாட்டுத் தீவனங்களுக்கு பயன்படக்கூடிய சோளமானது, மணப்பாறை மற்றும் திருச்சி பகுதிகளுக்கு விற்பனைக்காக விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இங்கு ஒரு மூட்டை 3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மேலும் சோளம் பயிரிடப்பட்டு வருகிற வைகாசி மாதத்தில் அறுவடைக்கு வரும் என்று விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பந்தல்...