தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர் பகுதியில் காலிமனைகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

கரூர், மார்ச் 20: காலிமனைகளில் விஷ ஐந்துகளின் நடமாட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருந்து வரும் சீத்த முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர் போன்ற பகுதிகள் நகராட்சியில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளன. இதன் காரணமாக நாளுக்கு நாள் இந்த பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. கரூர் நகரப்பகுதிக்கு நிகராக தாந்தோணிமலை, ராயனூர் பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இதே அளவுக்கு காலியிடங்களும் உள்ளன. அனைத்து அரசு அலுவலகங்களும் இந்த பகுதியில் உள்ளதால், கூடுதல் விலைக்கு பின்னால் விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இடங்களை வாங்கி போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

அந்த காலியிடங்களை சுற்றிலும் அதிகளவு முட்செடிகள் வளர்ந்து, விஷ ஐந்துகளின் நடமாட்டம் காரணமாக மற்ற குடியிருப்பு வாசிகள் பகுதிகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில், அனைத்து பகுதிகளிலும் வளர்ந்திருந்த சீத்த முட்செடிகள், இடத்தின் உரிமையாளர்களே அகற்ற வேண்டும், இல்லையென்றால், நிர்வாகம் சார்பில் அகற்றி அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு அதன்படி, சீத்த முட்செடிகள் அகற்றப்பட்டன.

தற்போது திரும்பவும் காடு போல பல்வேறு பகுதிகளில் சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. யாரும் இதனை அகற்ற முன்வருவதில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை பாதிப்பது போன்ற அச்சுறுத்தலுடன் வளர்ந்து வரும் சீத்த முட்செடிகளை நகராட்சி பகுதியில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள முட்செடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>