×

அறந்தாங்கி கல்லுச்சந்து சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நிறைவு

அறந்தாங்கி, மார்ச் 20: தினகரன் செய்தி எதிரொலியாக அறந்தாங்கி கல்லுச்சந்தை சாலையில் சேதமடைந்த பாலத்திற்கு பதிலாக நகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. அறந்தாங்கி களப்பக்காடு சாலையில் இருந்து கல்லுச்சந்து செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கல்லுச்சந்து, அக்ரஹாரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அறந்தாங்கியில் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பேராவூரணி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கல்லுச்சந்து சாலை களப்பக்காடு சாலையுடன் இணையும் இடத்தில் கழிவு நீர் கால்வாய்க்காக கட்டப்பட்ட சிறு பாலத்தில் பெரிய அளவில் ஓட்டை விழுந்து இருந்தது.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி வாகனத்தை இயக்கும்போது ஓட்டையில் தவறி விழுந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அறந்தாங்கி நகராட்சி ஆணையர;(பொறுப்பு) முத்துகணேஷ் தீவிர நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட உத்தரவிட்டார். அதன்படி தற்போது பாலம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. அறந்தாங்கியில் பழுதடைந்த பாலம் குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொண்டனர்.

Tags : bridge ,Aranthangi Kaluchandu Road ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...